சென்னை: சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை திரும்பும் சசிகலாவை வைத்து சென்னையில் பேரணி நடத்த அமமுக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுவை காவல்துறை நிராகரித்து உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், சசிகலா மற்றும் அவரது உறவினர்களான ஜெய டிவி  தலைமை நிர்வாகி விவேக்கின் தாயார் இளவரசி, சுதாகாரன் ஆகியோருக்கும் தொடர்பு இருந்து உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்ளுக்கு  4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சசிகலாவின் சிறை வாழ்க்கை முடிவடைந்து கடந்த 27ந்தேதி விடுதலையானார்.  கடந்த சில நாட்களாக பெங்களூருவில் தங்கி ஓய்வு எடுத்து வரும் சசிகலா, வரும் 8ந்தேதி சென்னை திரும்புகிறார்.

அவரை வரவேற்க அமமுகவினரும், சசிகலா உறவினர்களும்  தடபுடலாக ஆயத்தமாக வருகின்றனர். பெங்களூரு முதல் சென்னை வரை சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அதுபோல, சென்னையிலும்  சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அமமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் போரூர் முதல் அதிமுக அலுவலகம் வரையிலான  12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும் அமமுக திட்டமிட்டு உள்ளது. அதற்காக அனுமதி கோரி சென்னை போலீசில் அமமுக நிர்வாகி செந்தமிழன் மனு அளித்தார்.

இந்த மனுவை பரிசீலித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.  இந்த நிலையில், அவர்களது மனு நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை வரும் சசிகலா ஜெ சமாதிக்கு செல்லக்கூடும் என்றும், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் பாதுகாப்பு கருதி  ஜெயலலிதா நினைவிடத்தை அதிமுக அரசு மூடியுள்ளது. இந்த நிலையில், சசிகலாவின் சென்னை வருகையால் பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு  இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சசிகலாவுக்கு சென்னைக்குள் பிரமாண்ட வரவேற்பு மற்றும் பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.