டெல்லி: M-ல் தொடங்கும் பெயர்கள் ஏன் சர்வாதிகாரிகளுக்கு உள்ளன…? என  ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற, மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ்  உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், விவசாயிகளும் 70 நாட்களுக்கும் மேலாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாது டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின்  போராட்டம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. விவசாயிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும்விதமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இரும்பு முள்வேலிகள் அமைக்கப்பட்டுவருகின்றன.  மத்தியஅரசின் நடவடிக்கைக்கு, உலக நாடுகளில் உள்ள சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.

ஆனால், போராட்டக்காரர்களை சந்திக்கவோ, வேளாண் சட்டங்களை திரும்ப பெறவோ மத்தியஅரசு தயாராக இல்லை. இந்த நிலையில், பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டிவிட் போட்டுள்ளார்.

அதில், பெரும்பாலான சர்வாதிகாரிகளின் பெயர் M என்ற எழுத்தில் தொடங்குகின்றன என கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன் பல சர்வாதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். அதில், 

 மார்கோஸ்

முசோலினி

மிலோசெவிச்

முபாரக்

மொபுட்டு

முஷாரஃப்

மைக்கோம்பெரோ

ஆகியோரின் பெயர்களைப் பதிவிட்டு, எம்-ல் தொடங்கும் பிரதமர்   மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.