மதுரை:  மதுரை எய்ம்ஸ்-க்கான லே-அவுட் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 85சதவிகித நிதியை ஜப்பான் நிறுவனம் வழங்கும் என்றும்  ஆர்டிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில்  அறிவிக்கப்பட்டது.  கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, பிரதமர் மோடியும் நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினார். அவர் அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் ஆனநிலையில் தற்போது வரை நிதி ஒதுக்கப்படவில்லை. கட்டுமானப்பணியும் தொடங்கப்படவில்லை.ஆனால்,  வெறும் அறிவிப்பாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடு ரூ.1,264 கோடியிலிருந்து ரூ.2,000 கோடியாக உயர்த்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  தென்காசியைச் சேர்ந்த பாண்டிராஜா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக 12 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியிருந்தார்.

இதற்கு பதில் கிடைத்துள்ளது. அதில்,  மதுரை எய்ம்ஸ் திட்டத்தினை மறுமதிப்பீடு செய்ததால் நிதி 1,264-ல் இருந்து 2,000 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், இந்த நிதியில் 15 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும். 85 சதவீத நிதியை ஜப்பானின் ஜைக்கா நிதி நிறுவனம் வழங்கும் என  மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

மேலும்,  மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு இன்னும் ‘லேஅவுட்’ தயாராகவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கூறிய ஆர்டிஐ ஆர்வலர்,  ‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து 12 கேள்விகள் கேட்டிருந்தேன். ஆனால், அதில் பல கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளிக்கவில்லை. அளித்த பதில்களையும் நேரடியாக வழங்காமல் அதுவும் மழுப்பலாகவேக் கூறியுள்ளனர்.

ஜைக்கா நிறுவனம் இந்தத் திட்டத்திற்கு 85 சதவீதம் கடன் நிதி வழங்க உள்ளநிலையில் மீதி 15 சதவீதம் மத்திய அரசா, மாநில அரசா? யார் வழங்கவது? என்று கேட்டிருந்தேன். அதற்கு மீதி 15 சதவீதம் மத்திய அரசு தான் வழங்க உள்ளதாகக் கூறியுள்ளனர்.

எப்போது, எவ்வாறு, யார் திட்ட மதிப்பீட்டை அதிகரித்தார்கள் என்ற கேள்விக்கு, ‘ஜைக்கா’வால் தயாரிக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி திட்டமதிபீடு உயர்த்தப்பட்டது என்று பதில் அளித்தனர்.

ஆனால், திட்டமதிப்பீடு உயர்த்தப்பட்ட நாள் குறித்து தகவல் அளிக்கவில்லை. அதுபோல், எய்ம்ஸ் மருத்துவமனையின் விரிவான திட்ட விவரங்கள் மற்றும் லேஅவுட் ப்ளானை பற்றி கேட்டதற்கு தகவல் இல்லை என்று தெரிவித்து இருப்பதாக கூறி உள்ளளார்.

பிரதமர் மோடி  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் கடந்தும், அதற்கான லே-அவுட் இன்னும் தயாரிக்கப்படவில்லை என தெரிய வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மதுரைக்கு எய்ம்ஸ் வருமா? வராதா?