டெல்லி: நாடாளுமன்ற  மாநிலங்களவை 3வது நாளான இன்றைய கூட்டத்தில், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.  அடுத்தடுத்து தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால், 3வதுமுறையாக மதியம் 12.30 மணி வரை சபையை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு ஒத்தி வைத்தார்.

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 3வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.  இன்று, விவசாய மசோதாக்கள், விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  வலியுறுத்தினர்.  ஆனால்,  அதற்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி மறுத்தார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து முதல்கட்டமாக சபை காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் சபை மீண்டும் கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், விவசாய சட்டங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அதையடுத்து, 2வது முறையாக 11.30 மணி சபை ஒத்தி வைக்கப்பட்டது.

அதையடுத்து மீண்டும் சபை கூடியதும்,  சபையில் பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும், வேளாண் மசோதாக்கள் குறித்து ஏற்கனவே   4 மணி நேரம் மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றதாகவும் கூறினார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த எம்.பி.க்கள் ஆர்ஜேடி எம்.பி., மனோஜ் ஜா, விவசாயிகள் போராட்டம் குறித்து பேச வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த ராஜ்யசபா தலைவர் வெங்கைய்ய நாயுடு, விவசாயிகள் போராட்டம் குறித்து நாளை விவாதிக்கப்படும். இன்று விவாதிக்க முடியாது என கூறியதுடன் , இது தொடர்பாக விவாதம் முதலில் லோக்சபாவில் துவங்கப்பட வேண்டும். லோக்சபாவில் விவாதம் துவங்கிய பிறகு, ராஜ்யசபாவிலும் விவாதம் நடைபெறும் என்றார். கேள்வி நேரத்தை துவக்கினார்.

 

இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, சபை 3வது முறையாக மதியம் 12.30 மணி ஒத்தி வைக்கப்படுவதாக வெங்கையா நாயுடு அறிவித்தார்.