டெல்லி: ஆயுஷ் மருத்துவர்களும் சில குறிப்பிட்ட அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் (மிக்சோபதி) என்று மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்தியஅரசின் முடிவை எதிர்த்து, இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் அலோபதி, ஆயுர்வேதம், சித்தா, ஓமியோபதி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா என என பல்வேறு வகையான மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த அனைத்து வகையான மருத்துவப்படிப்புகளும் அடிப்படையில் ஒன்றே. ஆனால், சிகிச்சை வழிமுறைகள் மட்டும் அதற்கான நிவாரண மருந்துகள் மட்டுமே வெவ்வேறானவை. அனைத்து மருத்துவ முறைகளும் நான்கு ஆண்டுகள் கல்லூரியிலும், ஒரு வருடம் பயிற்சி மருத்துவராகவும் பணியாற்றவேண்டும்.
தற்போது உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனாவுக்கு ஆயுஷ் மருந்துகள் எந்தவித பின்விளைவுகளை ஏற்படுத்தாமல் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கியதை அனைவரும் அறிவர். சித்தாவின் கபரசுர குடிநீர், ஓமியோபதியின் ஆர்சால்ப் மருந்துகள் கொரோனாவை எதிர்த்து போராடியதில் பெரும் பங்காற்றின. ஆனால், ஆயுஷ் மருத்துவத்தை வளர்க்கவோ, அதை அங்கீகரிக்கவோ எந்தவொரு அரசுகளும் முன்வருவதில்லை.
இந்த நிலையில், அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இதுவரை அலோபதி மருத்துவர்களுக்கு மட்டுமே மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆயுஷ் மருத்துவர்களும் சில வகையான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்று மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, ஆயுஷ் மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்த மருத்துவர்கள் குடலிறக்கம், கண்புரை உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு அலோபதி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அறிவியல் ரீதியாகப் பொருந்தாத இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசின் இந்த உத்தரவால் பொதுமக்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுவார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆயுஷ் மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் பார்க்கக்கூடாது என போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மருத்துவர்கள் சங்கத்தினர் நேற்று (பிப்ரவரி 1ந்தேதி) தொடங்கினர். வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 7ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைப் பெண் மருத்துவர்கள் தலைமை தாங்குவார்கள் என்றும் அறிவித்துள்ளனர். மத்திய அரசின் இந்த உத்தரவு பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளிக்கவும் மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்திய மருத்துவ சங்கத்தினரின் இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல மருத்துவர்கள் சங்கங்களும் ஆதரவளித்துள்ளன. அதேபோல பல் மருத்துவர்கள் சங்கத்தினரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.