டெல்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் வடமாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 70வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், டெல்லி எல்லையில் இரும்புகளால் ஆன சுவர் எழுப்பி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள், இரண்டு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்தியஅரசு, விவசாய அமைப்புகளுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால், இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், போராட்டத்துக்கு தீர்வு காணப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதற்கிடையில் ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தன்று, விவசாயிகள் காவல்துறை எச்சரிக்கையை மீறி டிராக்டர் பேரணி நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர். இந்த வன்முறையின்போது காவல்துறையினரின் வாகனங்கள், பேருந்துகள் தாக்கப்பட்டன. மேலும், சுமார் 400 போலீஸார் காயமடைந்தனர்.
டெல்லி-உத்தரபிரதேசம் எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து முன்னேறுவதை தடுக்கும் விதமாக காசிபூர் பகுதி சாலையில் இரும்பு முட்களை சாலையில் பதித்துள்ளனர் டெல்லி போலீசார்.
இதைத்தொடர்ந்து, டெல்லி சிங்கு எல்லையில், விவசாயிகள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதற்காக, இரும்பு கம்பிகளை பயன்படுத்தி, தற்காலிக சுவர்களை, போலீசார் அமைத்துள்ளனர். மேலும், உடைக்க முடியாத வகையில், சிமென்ட் பயன்படுத்தியும், இந்த தற்காலிக சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பல அடுக்கு பாதுகாப்பை டெல்லி காவல் துறையினா் மேற்கொண்டுள்ளனா். அவர்களுடன் துணை ராணுவப் படை, விரைவு நடவடிக்கை படை, மத்திய ரிசா்வ் காவல்படை ஆகியோா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், போராட்டத்தை முடக்கும் மத்திய அரசின் முயற்சி, வெற்றி பெறாது. தடுப்புச் சுவர் அமைத்தாலும், விவசாயிகள் குவிவதை தடுக்க முடியாது’ , என்று கூறியுள்ளனர்.
குடியரசு தினத்தில் தில்லியில் நடந்த வன்முறை தொடா்பாக இதுவரை 122 பேரை கைது செய்துள்ளதாகவும், 44 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது மேலும், 15 விவசாயிகள் தலைவா்களை தேடப்படும் நபா்களாக அறிவித்துநோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுவரை மொத்தம் 59 விவசாயிகள் தலைவா்களுக்கு தேடப்படும் நபா்களாக அறிவித்து காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.