வுகாத்தி

ரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ள அசாம் சட்டப்பேரவை தேர்தலில் 100 இடங்களில் வெற்றி பெற காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

பாஜக கூட்டணி ஆளும் அசாம் மாநில சட்டப்பேரவை ஆயுள்காலம் இந்த வருடம் முடிவடைகிறது.  அதையொட்டி வரும் ஏப்ரல் –மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் கடந்த மாதம் 18 முதல் 20 வரை நடந்தது.  விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது மாநிலத்தில் இரு முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை தேர்தல் பணிகளில் முக்கியமாக இறங்கி உள்ளன.  அசாம் மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 126 தொகுதிகள் உள்ளன. அவற்றில் தற்போது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வசம் 86 தொகுதிகள் உள்ளன. இந்த கூட்டணி தற்போது ஆட்சியில் உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியிடம் பாஜக 60 அசாம் கன பரிஷத் 14 மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி 12 இடங்கள் உள்ளன.   காங்கிரஸ் கட்சி வசம் 26 தொகுதிகள், அனைத்திந்திய ஐக்கிய மக்கள் முன்னணியில் 13 தொகுதிகளும் சுயேச்சை வசம் ஒரு தொகுதியும் உள்ளன.

நடைபெற உள்ள் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் குறித்து பாஜக ”மிஷன் 100 பிளஸ்” என்னும் திட்டத்தை அறிவித்து 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது.   இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் 100 தொகுதிகள் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதையொட்டி சிறுபான்மையினர் அதிகம் உள்ள மோரிகான் மாவட்டத்தில் லகோரிகாட் பகுதியில் கூட்டமொன்றை நடத்தி உள்ளது.  இந்த கூட்டத்தில் அகில இந்திய சிறுபான்மை காங்கிரஸ் தலைவர் நதீம் ஜாவேத் கலந்துக் கொண்டுள்ளார்.

இந்த தேர்தலில் பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகள் இணய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து நதீம் ஜாவேத், “தற்போதைய பாஜக அரசு தொடர்ந்த் ஏழைகள், விவசாயிகள், மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி வ்ருகிறது  இதனால் அசாமில் கட்சிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது.  நாங்கள் மக்களின் பிரச்சினைகளை அறிந்து அதன் மூலம் அவர்களை அணுகி அடுத்ததாக அசாமில் ஆட்சி அமைப்போம்” என தெரிவித்துள்ளார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவரான பிரத்யுத் பர்டொலாய் தங்களது மாபெரும் கூட்டணி மூலம் கட்சி நிச்சயம் 101 இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  மேலும் அவர், “பாஜக 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முயலுவது வெறும் பகல் கனவாகும்.   எங்களுடன் ஒத்த கருத்துடைய மேலும் 5, 6 கட்சிகள் இணைய உள்ளன.

பாஜகவை பொறுத்தவரை இஸ்லாமியர் மற்றும் இஸ்லாமியர் அல்லாதோர் இடையே வெறுப்பை தூண்டி அந்த இன வேறுபாட்டின் மூலம் வெற்றி பெற நினைக்கிறது.   அசாம் மாநில பாரம்பரியம் இதனால் அழிய உள்ளது.  எனவே பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும். எனவே ஒத்த கருத்துள்ள கட்சிகள் இணைந்து பாஜகவை தோற்கடிக்க உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.