பஞ்ச ராம க்ஷேத்திரம் – அதம்பார்
அச்சுதமங்கலத்திலிருந்து 7 கி.மீ. நன்னிலத்திலிருந்து சுமார் 8 கி.மி தூரத்தில் இருக்கிறது அதம்பார் .
எத்தனையோ ராமர் கோவில்கள் இந்தியாவில் இருந்தாலும் திருவாரூர் மாவட்டத்தில் ஐந்து ராமர் கோவில்கள் அதி விசேஷமானவை. அவை பஞ்ச ராம க்ஷேத்திரங்கள் எனப்படும். அவற்றில் ஒன்று தான் அதம்பார் கோதண்ட ராமர் ஆலயம். மற்ற நான்கு ராம க்ஷேத்திரங்கள்: தில்லை விளாகம் (வீர கோதண்ட ராமர்) , வடுவூர் கோதண்ட வில்லேந்திய அழகிய ராமன்), பருத்தியூர்(ஸ்ரீ ராமர்), முடிகொண்டான்(ராமர் கிரீடத்துடன் காணப்படுவதால் முடி கொண்டான்) என்னும் ஊர்களில் இருக்கும் ராமர் ஆலயங்கள்.
ராமர் சம்பந்தப்பட்ட ராமாயண நிகழ்வுகள் நடந்த ஊர்கள் அருகே அருகே இங்கு இருக்கின்றன.
உதாரணமாக
அதம்பார் : (ஹதம் பார்) – ராமர் பொன்மானாக வந்தது மாரீசன் என்ற ராக்ஷஸன் என்று தெரிந்து அவனை ”ஹதம் செய்கிறேன் பார் ” என்று சொல்லியது தான் இப்போது அதம்பார்.
கொல்லுமாங்குடி – மாரிச்ச மானைக் கொன்றது (கொல்லு மான் குடி)
நல்லமாங்குடி — சீதைக்கு மாரிச்சன் பொன் மானாக வந்தது ”ஆஹா இந்த நல்ல மான் என்று சீதை மயங்கிய இடம் ”நல்ல மான் குடி”
வலங்கை மான் : ராமன் தன்னை பிடிக்க வருகிறான் என்று மாரீசன் வலப்பக்கமாக ஓடியது ”வலம் கை மான்” — சோத்து கை பக்கம் சென்னை பாஷையில்.
பாடகச்சேரி — ராவணன் சீதையைக் கடத்திச் சென்றபோது சீதை தனது ஆபரணமாகிய பாதகத்தைக் கீழே எறிந்தது ”பாடக சேரி”
தாடகந்தபுரம் : தாடகை ராமனிடமிருந்து லக்ஷ்மணனிடமிருந்து தப்பி ஓடி ஒளிந்த இந்த இடம் தாடகாந்த புரம்.
இது போல் ராமர் சம்பந்தப்பட்ட ஊர்கள் ஏகப்பட்டது இருக்கிறது.
17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அதம்பார் கோதண்டராமஸ்வாமி கோவில் புதுசாக இருக்கிறது. 2002ல் ஸ்ரீ க்ரிஷ்ணப்ரேமி வந்து புனருத்தாரணம் பண்ணி மகா ஸம்ப்ரோக்ஷணம் ஆகியிருக்கிறது. வைகானச ஆகம முறை வழிபாடு. ரங்கநாதர் ஆலயம். ஆனால் ராமர் கோவில் என்றால் தான் எல்லோருக்கும் தெரிகிறது.
கோதண்ட ராமர் இங்கே வடுவூர் ராமன் போலவே அழகன். கிழக்கே பார்த்து அருள் பாலிக்கிறார். ராமர், சீதை, லக்ஷ்மணன், ஹனுமான். மாரீச மான் காட்சி அளிக்கிறார்கள். ரங்கநாயகி தாயார் ரங்கநாதர் சந்நிதி இருக்கிறது. குட்டியாக கருடாழ்வார் சன்னிதியும் பிரகாரத்தில் பார்க்கலாம்.