சென்னை

கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகம் எங்கும் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.  இதில் திமுக தலைவர் மு க ‘ஸ்டாலின் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளின் குறைகளை மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறார்.  இது ஆளும் கட்சியினருக்கு கடும் கோபத்தை அளித்துள்ளது.

தமிழக அரசு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தத் தடை விதித்துள்ளது.  இதற்கு கொரோனா கட்டுப்பாடு விதிகளை அரசு காரணம் காட்டி இருக்கிறது.  கொரோனா பரவல் காரணமாக அதிக அளவில் மக்கள் ஒரே இடத்தில் கூடக் கூடாது என விதிகள் உள்ளது.  எனவே அதன் அடிப்படையில் இந்த தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தடைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் பிரபல நடிகருமான கமலஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டரில் அவர்,

” கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?”

எனப் பதிந்துள்ளார்.