டேராடூன்
அரித்வாரில் நடைபெற உள்ள கும்பமேளாவைக் காண வரும் பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.
அரித்வாரில் வரும் பிப்ரவரி 27 முதல் ஏப்ரல் 30 வரை கும்பமேளா நிகழ உள்ளது. வழக்கமாக இந்த விழாவில் தினசரி சுமார் 10 லட்சம் பேர் கலந்துக் கொள்வார்கள். குறிப்பாக இந்த கும்பமேளாவில் 4 நாட்கள் முக்கியமாகும். அந்த 4 நாட்களும் சுமார் 50 லட்சம் பேர் கலந்துக் கொள்வது வழக்கமாகும். தற்போது உத்தரகாண்ட் அரசு இந்த விழாவில் கலந்துக் கொள்வோருக்கு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அதன்படி கும்பமேளா விழாவில் முன்பதிவு செய்து கொண்டோர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். அத்துடன் விழாவுக்கு வரும் அனைவரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்னும் பரிசோதனை சான்றிதழை அவசியம் எடுத்து வர வேண்டும். இந்த சோதனை சுமார் 72 மணி நேரத்துக்குள் நடந்திருக்க வேண்டும். மேலும் அனைவரும் முகக் கவசம் அணிதல், 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்றல் போன்றவற்றைப் கடைபிடிக்க வேண்டும்.
இதையொட்டி உத்தராகாண்ட் அரசு பல சுகாதார ஊழியர்களைப் பக்தர்கள் உதவிக்கு நியமிக்க உள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் இல்லாதோருக்கு மலிவு விலையில் முகக் கவசம் விற்கும் கடைகள் ஏற்பாடு செய்யபட் உள்ளன. அதை வாங்க முடியாதோருக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கப்;பட உள்ளது.
முகக் கவசம் அணியாதோர் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதோருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் 65 வயதுக்கும் அதிகமானோர், கர்ப்பிணிப் பெண்கள் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளிட்டோர் விழாவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் அவசர தேவைக்காக ஆம்புலன்சுகள் மற்றும் 1000 படுக்கைகளுடன் ஒரு தற்காலிக மருத்துவமனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,.