டெல்லி: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 ஆண்டு விழா கடந்த 23ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதிபவனில் நேதாஷி உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. இந்த உருவப்படத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
ஆனால், அந்த படம், ஒரு நடிகரின் படம் என்று கூறப்படுகிறது. உண்மையான நேதாஜிக்கு பதிலாக சினிமாவில் நேதாஜியாக படத்தில் நடித்த நடிகரின் படம் திறந்து வைக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்திய மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படுபவர் சுபாஷ் சந்திர போஸ். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்றும், ஒரு துறவியின் வடிவில் வடஇந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 198இல் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவரது மறைவு குறித்த சர்ச்சை இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், ஜனவரி 23ந்தேதிஅவரது பிறந்தநாளான ஜனவரி 23ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும், ”பராக்கிரம் திவாஸ்” அதாவது, பராக்கிரம தினமாக, கொண்டாடப்படும் என மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இதையொட்டி, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நேதாஜி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதையடத்து, நேதாஜியின் உருவப்படம் ராஸ்டிரபதி பவனில் திறக்கப்பட்டது. இந்த படத்தை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்து மரியாதை செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், குடியரசு தலைவர் திறந்து வைத்த படம் உண்மையான நேதாஜியின் உருவப்படம் இல்லை என்று குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தைச் செர்ந்த ஸ்ரீஜித் முகர்ஜி என்ற திரைப்பட இயக்குனர் இயக்கிய கும்னாமி (Gumnaami) என்ற படத்தில் நடித்த நடிகர் பிரசெந்ஜித் சாட்டர்ஜி (actor Prasenjit Chatterjee/Bumbada) என்பவர் நேதாஜியாக நடித்த படம் என்று கூறப்படுகிறது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவரான நேதாஜியின் உருவப்படம் எது என்றுகூட தெரியாத மத்திய மத்திய கலாச்சார அமைச்சகம், நேதாஜியாக நடித்த நடிகரின் படத்தை, நேதாஜி படம் என குடியரசுத் தலைவரைக்கொண்டு, குடியரசு தலைவர் மாளிகையில் திறந்து வைத்து மாபெரும் தவறை செய்துள்ளது என விமர்சிக்கப்படுகிறது.