சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என கூறிய மு.க. ஸ்டாலின் வரும் 29ந்தேதி முதல் புதிய வியூகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
”திமுக ஆட்சி அமைந்த முதல் 100 நாட்களில் பொதுமக்களின் அனைத்துப் பிரச்னைகளும் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் என்றும் அதற்காக ; stalinani.com என்ற இணையதளம் அல்லது 91710 91710 என்ற எண்ணில் கோரிக்கைகளை பதிவிடலாம் என்று திமுக. தலைவர் மு.க.ஸ்டாலி அறிவித்து உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலி இன்று காலை சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
வரும் 29ஆம் தேதி முதல் புதிய கோணத்தில் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம். முறையாக திட்டமிட்டே புதிய வியூகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் புதிய தேர்தல் பிரசாரத்தை வரும் 29ஆம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து தொடங்குகிறேன்.
காலை, மாலை என 30 நாள்களுக்கு உங்கள் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளப்படும்
மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதே எனது முதல் பணி என்று உறுதியளிக்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும்.
தேர்தல் அறிக்கை வேறு, 100 நாள் செயல்திட்டம் வேறு.
குறைகளை எழுத்து வடிவில் தெரிவிப்பதற்காக மக்களிடம் படிவம் விநியோகிக்கப்படும். அந்த மனுக்கள் பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டும் வழங்கப்படும்
அந்த மனுக்களை சேகரித்து மக்கள் முன்பே சீல் வைத்து பாதுகாத்து, ஆட்சிக்கு வந்தவுடன் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண, தமிழக அரசில் தனித்துறை உருவாக்கப்படும்.
புதிதாக உருவாக்கப்படும் துறை, மாவட்ட வாரியாக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்
100 நாட்களில் மக்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகத்தில் 1 கோடி குடும்பங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு நானே ( மு.க.ஸ்டாலின்) பொறுப்பு என்றார்.
மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை தனியே வெளியிடப்படும் என்று கூறியவர்ல, தமிழகம் பல துறைகளில் பின்னடைந்துள்ளது. , பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 கொடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.