மும்பை: பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய ஷர்துல் தாக்குர், சிட்னி டெஸ்ட் டிரா ஆவதற்கும் ஒரு முக்கியமான காரியத்தை செய்துள்ளார்.
சிட்னி டெஸ்ட்டில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 407 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை விரட்டிய இந்திய அணி, புஜாராவின் விக்கெட் பறிபோனதும் தடுப்பாட்டத்திற்கு மாறியது. போட்டியை டிரா செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அப்போது, டிரெஸ்ஸிங் அறையிலிருந்து தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் போன்றோர், களத்தில் நின்ற அஸ்வின் மற்றும் விஹாரிக்கு சில ஆலோசனைகளை கடத்த விரும்பினர்.
“நாதன் லயனை கையாள்வதற்கு சிறந்த நபர் ரவிச்சந்திரன் அஸ்வின். அதேபோன்று, கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் போன்றவர்களை கையாள்வதற்கு சிறந்த நபர் விஹாரி. எனவே, அவர்கள் அதற்கேற்ப விளையாட வேண்டும்” என்பது ரவிசாஸ்திரியின் செய்தியாக இருந்தது.
ஷர்துல் தாக்குரை அழைத்த சாஸ்திரி, இந்த விஷயத்தை, அந்த இருவரிடமும் தெரிவித்துவிட்டு வருமாறு கூறி அனுப்பினார். ஆனால், ஷர்துலின் மனதிலோ வேறு எண்ணம். நன்றாக ஆடிக்கொண்டிக்கும் அந்த இருவரையும் எதற்காக தேவையின்றி குழப்ப வேண்டுமென அவர் நினைத்தார்.
இதனால், அஸ்வினிடம் ஓடிச்சென்றார் அவர். அப்போது அஸ்வின், “என்ன சொல்ல வந்தாய் நண்பா? சொல் அதை” என்றுள்ளார்.
ஆனால், ஷர்துலோ அடித்துக் கேட்டாலும் அதை சொல்லமாட்டேன் என்ற விதத்தில், “டிரெஸ்ஸிங் அறையில் பல ஆலோசனைகளை வழங்கினர். ஆனால், நீங்கள் இருவரும் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள். அவர்கள் சொன்ன ஆலோசனைகள் எதையும் நான் உங்களிடம் கூறமாட்டேன். உங்களின் சிறப்பான பயணத்தை இப்படியே நீங்கள் தொடருங்கள்” என்று கூறிவிட்டு வந்துவிட்டார் ஷர்துல். கிட்டத்தட்ட வடிவேல் பட காமெடி பாணியில் அமைந்தது ஷர்துலின் செயல்.
தற்போது, இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் அணி வட்டாரத்தில் சுவாரஸ்யத்தைக் கிளப்பியுள்ளது.