”1953-ம் ஆண்டு முகவை மாவட்டம் பரமக்குடியில் எனக்கு ஒரு பாராட்டு விழா. அதில் கலந்து கொண்டு விட்டு திருச்சி வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதி அருகில் விபத்து. மைல் கல்லில் கார் மோதியது. மைல் கல் உடைந்து, பயணிகள் விடுதியின் முன்புற வாயில் கதவில் போய் மோதி நின்றது கார்.
காருக்குள் இருந்த நாங்கள் உருண்டோம். நண்பர்களுக்கு காயம் இல்லை. என் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. மறுநாள் காலையில் முகமே வீங்கியது. இடது கண்ணில் கடுமையான வலி. கண் மருத்துவமனையில் சேர்ந்து, 12 அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1967-ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் ஒரு கார் விபத்து. கண்ணில் ஏற்கனவே இருந்து வந்த வலி மேலும் அதிகமாயிற்று. 1971-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றேன். பால்டிமோர் நகரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் கண் வலி சற்று குறைந்த போதிலும், அவ்வப்போது இன்னமும் வந்த வண்ணமே உள்ளது. இன்றளவும் என்னை வேதனைப்படுத்திக் கொண்டே இருக்கிறது” என்று அறிக்கையில் விவரிக்கிறார் கருணாநிதி.
ஃபேஸ்புக்கில் சிவசங்கரன் சரவணன் இதுபற்றி குறிப்பு எழுதியுள்ளார்:
”கலைஞருக்கு ஏற்பட்ட பிரச்னை செகண்டரி க்ளாகோமா. அடிபட்டதால் கண்ணில் உள்ள திரவ அழுத்தம் மிகவும் அதிகரித்து தாங்க முடியாத வலி ஏற்படும்.
அப்போது கண் அழுத்தத்தை குறைக்க நவீன சிகிச்சை முறைகள் இல்லை. கருப்பு அட்டையை புருவத்தை ஒட்டினாற்போல விடுவார்கள். அந்த அட்டை ரத்தத்தை உறிஞ்ச உறிஞ்ச நோயாளிக்கு வலி குறையும். கலைஞரும் அட்டைகளுக்கு ரத்தம் கொடுத்தவர்தான்.
கிளாக்கோமாவினால் ஏற்படும் வலியை வார்த்தையால் விவரிக்க முடியாது. “ஐயோ எனக்கு பார்வை இல்லாட்டியும் பரவால்ல, என் கண்ணை எடுத்துடுங்க ” என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்லுமளவிற்கு படுத்தி எடுத்துவிடும்.
கலைஞருக்கும் அதனால்தான் ஒரு கண் நீக்கப்பட்டது.
ஒரு கண்ணை மட்டும் கையால் மூடிக்கொண்டு மாடிப்படி இறங்கிப் பாருங்கள். இரண்டு கண்ணின் பார்வைகளும் ஒன்றிணைந்த பைனாகுலர் சிங்கிள் விஷன் என்ற இயற்கையின் கொடையை அப்போதுதான் புரிந்து கொள்ள முடியும். ஒரு கண்ணில் பார்க்கும்போது முப்பரிமாண பார்வை கிடைக்காது. வேகமாக இயங்க முடியாது.
ஒரு மிகப்பெரிய இழப்பிலிருந்து எப்படி மீண்டு எழுச்சி பெறுவது என்பதை , எழுபது வருடங்களுக்கு மேலாக எழுதி வருகிற கலைஞரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்”.
நன்றி : Kathir Vel