டில்லி
வரும் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலை முன்னிட்டு நாளை நிர்மலா சீதாராமன் வழக்கப்படி அல்வா கிண்ட உள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பு அல்வா கிண்டி அளிப்பது வழக்கமாகும். இது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக இனிப்புடன் கொண்டாடும் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த அல்வா நிகழ்வு நாடாளுமன்ற வடக்கு வளாக்த்தில் நடைபெறும். இது முடிந்த பிறகு நிதிநிலை தயாரிக்க அனைத்து ஊழியர்களும் வடக்கு வளாக தரை தளத்தில் 10 நாட்கள் இருப்பார்கள்.
இதற்குக் காரணம் நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணியாளர்கள் மூலம் இது குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகக் கூடாது என்பதாகும். இந்த வருடம் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் வருடத்துக்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிதிநிலை அறிக்கை அச்சிடப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கான நாடாளுமன்ற கூட்டம் ஜனவரி 29 ஆரம்பித்து பிப்ரவரி 15 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் அடுத்த கூட்டம் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும் எனச் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். நாளை நாடாளுமன்றத்தின் வடக்கு வளாகத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்ட உள்ளார். இந்நிகழ்வில் அவருடன் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், நிதி அமைச்சக செயலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொள்ள உள்ளனர்.