டெல்லி: பிளாஸ்டி தேசியக் கொடிகளை பயன்படுத்துவதை தவிர்த்து, காகிதத்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகள் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

குடியரசு தின விழா நெருங்குவதை யொட்டி நாடு முழுவதும் தேசியக் கொடி தயாரிப்பு பணிகள் மும்முரமடைந்துள்ளன. இந் நிலையில் நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கி உள்ளது. பொது மக்கள் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளைப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுமாறு மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

இந்திய கொடிகள் சட்டம் (2002) மற்றும் தேசிய கொடி அவமதிப்பு சட்டம் 1971ன் படி கண்டிப்பாக இதை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு  மத்திய அரசு ஆலோசனை வழங்கி இருக்கிறது. பிளாஸ்டிக் கொடிகள் காகித கொடிகளைப் போல மக்கும் தன்மை கொண்டவை அல்ல என்பதால், இவை நீண்ட காலமாக சிதைவடையாது.

மேலும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசியக் கொடியை சரியான முறையில் அகற்றுவதை உறுதி செய்வது ஒரு நடைமுறை சிக்கலாகும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தேசிய கொடி அவமதிப்பு சட்டப்படி, தேசியக் கொடியை பொது அல்லது வேறு எந்த இடத்திலும், உடல் ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ அவமதிப்பதால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.