டெல்லி: தேசபக்தி மற்றும் தேசியவாத சான்றிதழ்களை வழங்குபவர்கள் இப்போது முற்றிலும் அம்மணமாக நிற்கிறார்கள் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சாடிய சோனியா வேளாண் சட்டம் முதல் அர்னாப் வரை மோடி அரசு மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் கொண்ட அமைப்பாக கருதப்படும் காரியக்கமிட்டிக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் மட்டுமின்றி, வேளாண் சட்டங்கள், பாலகோட் தாக்குதல், விவசாயிகள் போராட்டம், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் தலைவர் பதவி தொடர்பாகவும் முக்கிய முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தொடக்க உரையாற்றினார். அப்போது, நாட்டின் தற்போதைய நிலவரம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், பொருளாதாரம் மற்றும் கட்சியின் தேர்தல் உள்பட பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பேசினார்.
1. புதிய விவசாய சட்டங்களின் அர்த்தமுள்ள விவரங்கள், தாக்கங்கள் மற்றும் தாக்கங்களை ஆராய்வதற்கான வாய்ப்பு பாராளுமன்றத்தில் உணர்வுபூர்வமாக எதிர்க்கட்சிகளுக்கு மறுக்கப்பட்டது.
வேளாண் சட்டத்தின் மீதான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய சோனியா, உணவுப் பாதுகாப்பின் அடித்தளங்களை கொண்ட விவசாயத்தின் தூண்களான “எம்.எஸ்.பி, பொது கொள்முதல் மற்றும் பி.டி.எஸ் ஆகியவற்றை புதிய வேளாண் சட்டங்கள் அழித்து விடும் என்றதுடன், இந்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஏற்காது, திட்டவட்டமாக நிராகரிக்கிறோம் என்றார்.
“விவசாயிகளின் கிளர்ச்சி தொடர்கிறது, ஆனால், மோடி அரசாங்கம் அதை கண்டுகொள்ளாமல், உணர்வற்ற தன்மையையுடன் ஆணவப்போக்குடன் செயல்படுகிறது என்று சாடினார்.
2. நாடு தழுவிய கோவிட் -19 தடுப்பூசி இயக்கி குறித்து பேசிய காந்தி, இந்த செயல்முறை முழு அளவில் முடிவடையும் என்று நம்புவதாக கூறியதுடன், “கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகித்த விதத்தில் மோடி அரசாங்கம் நம் நாட்டு மக்களுக்கு சொல்லமுடியாத துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வடுக்கள் மறைய பல ஆண்டுகள் ஆகும்.
3. நாட்டின் பொருளாதாரத்தின் நிலை குறித்து பேசிய சோனியா, “எம்.எஸ்.எம்.இ மற்றும் முறைசாரா துறை போன்ற பொருளாதாரத்தின் அடித்தளம். ஆனால், அதற்கான ஆயுட்காலத்தை நீட்டிக்க மறுத்துவிட்டதால்,அவைகள் அழிந்து வருகின்றன” என்றார்.
4. மோடியின் ஆட்சியின் தனியார்மயமாக்கல் கொள்கை, அரசாங்கத்தை விழுங்கி வருவதாக குற்றம் சாட்டிய காந்தி, இவை, தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களை பலவீனப்படுத்துகிறது என்றும், மத்திய அரசால், கவனமாக கட்டமைக்கப்பட்ட பொது சொத்துக்களை மோடி அரசு தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
5. புதிய நாடாளுமன்றம் கட்டப்படும், மத்திய விஸ்டா திட்டம் தொடர்பாக மோடி அரசின் நடவடிக்கைளை விமர்சித்த சோனியா, நாடு சிக்கியுள்ள இந்த இக்கட்டான நேரத்தில், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பெரும் தொகையானது, வேதனையை தருவதாகவும், இது தற்பெருமைக்காக செய்யப்படும் செயல் என்றும் விமர்சித்தார்.
6. தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியதாகி இருப்பதாகவும், ராணுவ ரகசியங்கள் கசிந்துள்ளது என்று அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ்அப் உரையாடல் குறித்து விமர்சித்த சோனியா, தனி நபருடன் “தேசிய பாதுகாப்பு எவ்வாறு முழுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பியதுடன், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மவுனம், மற்றும் காது கேளாது போல நடிப்பதாக சாடினார்.
மேலும், இது தேசத்துரோகம் என்று கடுமையாக சாடிய சோனியகாந்தி , மற்றவர்களுக்கு தேசபக்தி மற்றும் தேசியவாத சான்றிதழ்களை வழங்குபவர்கள் இப்போது முற்றிலும் அம்மணமாக நிற்கிறார்கள் என்று காட்டமாக கூறினார்.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.