வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், முதல் நாளிலேயே மின்னல் வேகத்தில் செயல்பட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்கான ஆணைகளில் கையெழுத்திட்டு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.பதவியேற்ற முதல் நாளில் பைடன், நிர்வாகம் தொடர்பாக 15 ஆணைகளில் கையெழுத்திட்டதாகவும், அதிபரின் குறிப்புகள் என்று பொருள்படும் பிரசிடென்ஷியல் மெமோக்கள் -2ல் கையெழுத்து போட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், டிரம்ப் காலத்தின் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரும் விஷயத்தில் தாம் தாமதம் காட்டப் போவதில்லை என்பதும், கொரோனா உலகத் தொற்று காரணமாக அமெரிக்கா வரலாற்றுச் சிக்கலில் இருக்கும் நிலையில் வேகமாக முடிவெடுக்கவேண்டியதாக புதிய அதிபர் பதவி இருக்கும் என்பதும் இந்த அதிவேக உத்தரவுகள் சொல்லும் சேதிகள்.அமெரிக்க அரசில் நிர்வாக உத்தரவுகள் எனப்படும் எக்சிகியூட்டிவ் ஆர்டர்கள் என்பதன் பொருள் என்ன?நிர்வாக உத்தரவுகளை ஒரு அதிபர் பிறப்பிக்க முடியும். அவற்றுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறவேண்டியதில்லை. ஆனால், ஒரு அதிபர் இப்படி பிறப்பித்த உத்தரவு ஒன்றினை நாடாளுமன்றம் விவாதித்து நிராகரிக்க வழி உண்டு.
நாடாளுமன்ற நிராகரிப்பை தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபர் ரத்து செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபராக இதுவரை பதவியேற்ற அதிபர்களில், முதல் நாளில் டிரம்ப் 8 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஒபாமா 9 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 உத்தரவுகளிலும், கிளிண்டன் 3 உத்தரவுகளிலும் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.