பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலா, இளவரசி உள்ளிட்ட 3 பேரின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.
ஆனால் வரும் 27ம் தேதி அவர் அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் சசிகலாவுக்கு இன்று காலை அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட, சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், சிவாஜி நகரில் உள்ள பவுரிங்கா அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை பெங்களூரு சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா நெகட்டிவ் என்பதால் மீண்டும் மருத்துவமனையில் இருந்து சிறைச்சாலைக்கு சசிகலா அழைத்துச் செல்லப்பட்டார்.