டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்க உள்ள நிலையில், ஜனவரி 30 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறாா். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ந்து ஒத்தி வைக்கப்படும் சபை, பின்னர் பிப்ரவரி 1ந்தேதி தொடங்குகிறது.
மக்களவை பிற்பகலிலும், மாநிலங்களவை முற்பகலிலும் நடைபெற உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். பிப்ரவரி 1-ம் தேதி 2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இரு கட்டங்களாக நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட தொடர், வரும் 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பின்னர் 2வது கட்டத் தொடர் மாா்ச் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்துக்கு முன்பாக வரும் 30ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திரே மோடி அழைப்பு விடுத்துள்ளார். காணொளி காட்சி மூலம் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.