சென்னை: அதிமுக அரசில் நடைபெற்ற குட்கா வழக்கு தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சந்தையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்ததில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, குட்கா, புகையிலை, பான் மசலா போன்றவைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி திருட்டுத்தனமாக, சந்தையில் தொடர்ந்து விற்பனை ஆகி வந்தது.
இது தொடர்பான வழக்கில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தமிழகத்தில் கிடைப்பதில் மாநில அமைச்சர்களுக்கும், மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
குட்கா முறைகேடு தொடர்பாக, சிபிஐ-யை தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் 2018ஆம் ஆண்டு வழ்க்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில், தற்போது குட்கா வழக்கிற்கான குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் அமலாக்கத் துறையின் வழக்கறிஞர் என்.ரமேஷ் தாக்கல் செய்தார். அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார், கலால் வரித்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், கிடங்கு உரிமையாளர் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், ஆந்திராவை சேர்ந்த அருணா குமாரி, சூரிய புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 27 பேருக்கு எதிராகவும், 3 நிறுவனங்களுக்கு எதிராகவும் ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளதாக வழ்க்கறிஞர் என்.ரமேஷ் விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மத்தியஅரசின் அதிமுக அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.