டில்லி
கல்சா எய்ட் என்னும் சீக்கிய அமைப்பின் மீதான சட்ட நடவடிக்கையை தேசிய புலனாய்வு நிறுவனம் அந்த அமைப்பு நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டடதால் நிறுத்தி வைத்துள்ளது.
சீக்கிய அமைப்பான கல்சா எய்ட் அமைப்பு கடந்த 1999 ஆம் ஆண்டு பிரிட்டனில் வசிக்கும் சீக்கிய ஆர்வலர் ரவிந்தர் சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ’அனைத்து மனிதர்களையும் ஒன்றாகக் கருதி மனிதாபிமானத்துக்குப் பணி புரிவோம்’ என்னும் கொள்கையின் அடிப்படையில் பணியாற்றி வருகிறது.
கடந்த 2018 ஆம் வருடம் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது முன்னணியில் உள்ள பணியாளர்களுக்கு உதவி செய்தது. மற்றும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தற்போது அரியானா விவசாய போராளிகளுக்கும் இந்த அமைப்பு பெரிதும் உதவியது. விவசாய போராளிகளுக்கு இந்த அமைப்பு, உணவு, குடிநீர், கழிவறை மட்டுமின்றி மின்சார கால் பிடித்துவிடும் இயந்திரங்களும் அளித்தது.
இதையொட்டி கடந்த 16 ஆம் தேதி மத்திய அரசின் தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த அமைப்பின் இந்திய இயக்குநரான அமன்பிரீத் சிங் மற்றும் அமைப்பின் மற்ற ஆர்வலர்களுக்கு விசாரணைக்கு வருமாறு நோட்டிஸ் அனுப்பியது. இதற்கு இணையம் மூலம் கல்சா எய்ட் அமைப்பு தாங்கள் இந்த உதவிகளை மனிதாபிமான அடிப்படையில் செய்ததாகவும் இதனால் தாங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாகவோ அல்லது இந்திய அரசுக்கு எதிராகச் செயல்படவோ இல்லை எனப் பதில் அளித்தது.
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி அன்று இந்நிறுவனம் அமைதிக்கான நோபல் பரிசுக்குச் சிபாரிசு செய்யப்பட்டது. இதையொட்டி தேசிய புலனாய்வு நிறுவனம் நேற்று முன் தினம் மற்றும் நேற்று நடக்க இருந்த விசாரணையை ஒத்தி வைத்தது. இந்த விசாரணை மறு தேதி இடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கல்சா எய்ட் நிறுவனர் ரவிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.