டெல்லி: நாடாளுமன்ற கேண்டீனில் உணவு மானியம் முற்றிலுமாக நீக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு (2020) ஜனவரியில், கேன்டீனில் விலை உயர்வு உள்பட சில மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், தற்போது, உணவு மானியம் முற்றிலுமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கேன்டீனில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் சாதாரண கேட்டீன்களில் விற்கப்படுவதுபோலவே விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்கி, பிப்ரவரி 1ந்தேதி பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில், ஜனவரி 29 முதல் நாடாளுமன்ற பட்ஜெட் அமர்வு தொடங்க உள்ளது.
மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் 9 மணி வரையிலும் நடைபெறும்.
ஜீரோ ஹவர் (Zero Hour) மற்றும் கேள்வி நேரங்களும் நடைபெறும்.
எம்.பி.க்கள் அனைவரும் ஆர்டி-பி.சி.ஆர் ( RT-PCR test) பரிசோதனை செய்ய வேண்டும்.
பட்ஜெட் அமர்வின் (Budget Session) போது கோவிட் -19 நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றார்.
மேலும், உலகெங்கிலும் உள்ள பாராளுமன்றங்களின் செயல்பாட்டை கொரோனா தொற்று பாதித்துள்ளது என குறிப்பிட்டவர், இருப்பினும், தொற்றுநோய் நெருக்கடியின் போதுகூட, இந்திய நாடாளுமன்றம், அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் இணங்க சபையை வெற்றிகரமாக நடத்தியது. நாடாளுமன்ற வளாகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு நாடாளுமன்ற கேன்டீனில் மானிய விலையில் உணவு வழங்கப்படுவது குறித்து விவாதங்கள் எழுந்தன. இதுதொடர்பாக முன்னாள் மக்களவைத் சபாநாயகர் சுமித்திர மகாஜன், நாடாளுமன்ற உணவகங்களில் விற்கப்படும் உணவுகள் விலையை நிர்ணயம் செய்ய ஒரு குழுவைஅமைத்தார். அந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்று பல்வேறு உணவுகளின் விலையும் ஏற்றப்பட்டன.
இதற்கிடையில், நாடாளுமன்ற கேண்டீனில் மானிய விலையில் உணவு பெறுவதை கைவிடுவது என எம்.பி.க்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக, சபாநாயகர் ஓம் பிர்லா பல்வேறு கட்சி எம்.பி.க்களிடமும் கருத்துக் கேட்டதில் அவர்கள் அளித்த பதிலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது உணவு மானியம் முற்றிலுமாக நீக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற கேட்டீனுக்கு மானியம் நிறுத்தப்பட்டு உள்ளதால், ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 8 கோடி ரூபாய் மிச்சமாகும் என கூறப்படுகிறது.