மும்பை: டிஆர்பி முறைகேடு குறித்து மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், 500 பக்கங்களுக்கும் மேலாக, ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்(BARC) அமைப்பின் முன்னாள் தலைவர் பார்தோ தாஸ்குப்தா இடையிலான வாட்ஸ்ஆப் உரையாடல் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் குறித்தும், பிரதமர் அலுவலகத்தை அணுகுவது குறித்தும் உரையாடல் இடம்பெற்றுள்ளது.
அர்னாப் கோஸ்வாமியும், BARC அமைப்பின் தலைவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த உரையாடலின்போது, BARC தரவை பொதுவெளியில் வெளியிடுவதை நிறுத்தி வைக்கும் வகையில், அர்னாப் கோஸ்வாமி மத்திய அரசை அணுக வேண்டும் என்று தாஸ்குப்தா கேட்கிறார். அப்படி தரவுகள் வெளியிடப்பட்டுவிட்டால், உங்களைப் போன்றவர்களுக்கு சிரமம் என்று தாஸ்குப்தா கூறுகிறார்.
அதேசமயம், 2019 தேர்தலில் பாரதீய ஜனதா மீண்டும் வெற்றிபெற்று விட்டால், டிராய் அமைப்பு வலுவிழந்துவிடும் என்றும் அதில் பேசப்படுகிறது. இந்த உரையாடலில், பாலகோட் தாக்குதல் குறித்தும் பேசப்படுகிறது. மேலும், அந்த நேரத்தில், காஷ்மீரில் ஏதோ பெரிய சம்பவம் நிகழப்போகிறது என்றும், அதன்மூலம் அரசுக்கான ஆதரவு பெருகும் என்ற அர்த்தத்திலும் உரையாடல் செல்கிறது.