ஆஸ்திரேலியா, சிட்னி ‘தமிழ் முழக்கம்’ வானொலிக்காக ஆசி.கந்தராஜா 1998ம் ஆண்டு நடிகர் நாகேஷ் அவர்களுடன் கண்ட பேட்டியில் இருந்து… எழுத்து வடிவம்.
வணக்கம் நாகேஷ் சார்…
வணக்கம் சார்…
உங்களிடம் இப்பொழுது என்னென்ன படங்கள் கைவசம் இருக்கின்றன?
எங்கிட்ட இப்போ கைவசம் இருக்கின்ற படம் முருகன் படம், ராமர் படம், ஆஞ்சநேயர் படம், திருவள்ளுவர்… இதுமாதிரி நிறையப் படங்கள் இருக்கு.
நடித்துக் கொண்டிருக்கின்ற படங்களைக் கேட்டேன்…
இப்ப யார் நடிக்கலேங்கிறீங்க? ஒவ்வொரு வீட்டிலேயும் அம்மா, பையன், பேத்தி, மாமன், மச்சான் எல்லோரும் ஒருத்தொருக்கொருத்தர் நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க
இல்லை, எத்தனை படங்கள்னு கேட்டேன்…
ரசிக்கும் படங்கள் ரொம்ப…..கம்மி. ரசிக்க முடியாத படங்கள் நிறைய.
உங்க எதிர்காலம் எப்படி இருக்கும்?
இன்னிக்கே சொல்லணும்; இல்லையா? நான் உங்களைக் கேட்கிறேன்…, சார் உங்களுக்கு மொத்தம் எத்தனை பல்லு? அப்படின்னு நான் கேட்டா, 32ன்னு சொல்லுவீங்க. சொல்லிக் கேட்டீங்களே தவிர என்னிக்காவது என்ணிப் பார்த்திருக்கீங்களா?
உங்கள் திருமணத்துக்குப் பிறகுதான் நீங்கள் பெரிய நிலையை அடைந்தீர்களென்று கேள்விப்பட்டேன், உண்மைதானா அது?
நீங்க கேள்விப்பட்டது அப்படி, நான் கேள்விப்பட்டது என்ன தெரியுமா? Marriage is a romance in which the hero dies in the first chapter.
நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.
நீங்கள் நடித்த முதல் படம்?
இரண்டாவது படத்துக்கு முந்திய படம்
உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி?
நினைவில் வச்சுக்கிற அளவுக்கு எந்த நிகழ்ச்சியுமே இல்லை, என்னைப் பொறுத்தவரையிலும். ஆனா ஒண்ணு. மறக்க முடியாம இருக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. ஒலிம்பிக்கிலே நடக்குதே, அந்த ஓட்டப்பந்தயத்துல, இந்தியா வர்ரது ரொம்பக் கஷ்டமாயிருக்கு. தமிழன் வர்ரது ரொம்பக் கஷ்டம். லிஸ்டிலேயே வரமாட்டேங்கிறாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரையிலும் அது 100 மீட்டராயிருந்தாலும் சரி, 400 மீட்டர்ஸ் தடையோட்டமா இருந்தாலும் சரி ஒரு தமிழனுக்குப் பின்னால ஒரு வெறி நாயை விட்டாப் போதும், world best record அவன் தான். உயிருக்குப் பயந்து அப்படி ஓடுவான்னா…, அப்படி ஓடுவன் சார்.
இந்த ஒரு சான்ஸ் இருக்கு, ஒரு வேளை அவங்க ஒரு வெறி நாயும் கூட ஓடலாம்னு பர்மிஷன் குடுத்தாங்கன்னா.
முந்திய நகைச்சுவைக்கும் இன்றைய நகைச்சுவைக்கும் ஏனிந்த தேய்மானம்?
நிலவு அதாவது நிலா…., I mean moon…., என்னிக்குமே ஒரே மாதிரித்தான் இருக்கும், ஆனா, நாம பார்க்கும் போது தேய்பிறையா வந்து ஒருநாள் இருட்டடிச்சுப் போய் அமாவாசை ஆகி, அதுக்கப்புறம் வளர்பிறை வரத்தான் செய்யும். அந்த வளர்பிறை வருவதற்கு அதிக நாட்கள் ஆகாதுங்குற நம்பிக்கை எனக்கு நிச்சயமா இருக்கிறது சார்.
ஜாதிப்பிரிவினைகளைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
பலபேர் பலவிதமான காரணங்கள் சொல்லுவாங்க. என் வீட்டைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால். நான் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டேன். மூன்று பையன்கள். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். முதல் மகன் ஒரு கிறித்தவப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான். இரண்டாவது மகன் ஒரு முசல்மான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். மூன்றாம் மகன் ஒரு ஐயர்ப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான்.
எங்கள் குடும்பத்தில் எதுவிதமான குழப்பமும் இல்லை. காரணம் எல்லாக் கல்யாணத்துக்குமே மறுப்பே சொல்லாமல் நான் நடத்தி வைத்தது தான். ஏனென்றால், என் மனதுக்குள் இந்த ஜாதி மதம் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும் கடைசியில் என் முடிவுக்குத்தான் வந்து தீர வேண்டும். அதை நான் செய்து காட்டவும் முடியும்.
ஜாதி மதமென்று எப்படி வருகிறதென்றால் உன் வெளித்தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இது நெம்பர் 1.
நெம்பர் 2, உனக்கு ஒன்று பிடித்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை.
நெம்பர் 3, உனக்கு ஒன்று பிடித்தது அதுவே எனக்கும் பிடித்தது. அதனால் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.
அடுத்ததாக, உங்களிடம் ஒரு அரசியல் கேள்வி, பிற்கால இந்தியா எப்படி இருக்கும்?
அது ஒரு டைப்பாத்தான் இருக்கும். இப்ப உங்க ஆஸ்த்திரேலியா இருக்கே, அங்க வந்து கிரிக்கெட், விஞ்ஞானம், கங்காரு, புல்வெளிகள், பால், விவசாயம், இதெல்லாம் முன்னேறிக்கிட்டே இருக்கு. அங்கிருக்கும் தமிழர்கள்….நீங்க தயவு செய்து எனக்காக மைக்கு…., ஒண்ணு கண்டுபிடியுங்க. அந்த மைக் முன்னால் நின்னு யாராவது சின்னப் பொய் சொன்னாக் கூட அந்த மைக் டைம் பாம் மாதிரி வெடிச்சு பேசுறவனுடைய தலை சுக்கு நூறாலகி….செத்துடணும்…, On the spot.
ஏன்னு கேட்டா…..இவன் எடுக்கும் போதே….அன்பார்ந்த சகோதரிகளே, தாய்மார்களேன்னுதான் ஆரம்பிக்கிறான். இதில அன்பு இருக்கா? சகோதரி மாதிரிப் பார்க்கிறானா? அப்படின்னு ஆரம்பிக்கும் போதே…., டமால், அப்படின்னு வெடி வெடிக்கும். இவன் இருக்க மாட்டான். அனேகமாக மைக் முன்னால பேசுறதுக்கு எவனுமே வரமாட்டான்.
மைக் முன்னால பேசுறத நிறுத்த முடிஞ்சா, சத்தியமா எந்த countryயும் முன்னுக்கு வரும் சார்.
உங்க குறிக்கோள் என்ன?
குறிக்கோள்னு கேட்டா… ஒருத்தொருக்கொருத்தர் பேசாம…..யார் வம்புக்கும் போகாம….சும்மா உட்கார்ந்திடம்னு சொன்னாக்கா…,ஏதோ சவ வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும். அதாவது ஒரு இழவு வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.
அதனால, கொஞ்சம் சுறுசுறுப்பா இருக்கணும்னா சண்டை வரணும் சார். ஆனா, சமாதானமா முடியணும். அப்புரம் வந்து…., சழக்கு வழக்கெல்லாம் இருக்கணும். அது வந்து…., சுவாரஸ்யமா முடியணும். பணக்காரன் ஏழையெல்லாம் இருக்கணும். ஆனா ஏழைதான் பணக்காரனுக்கே ஐடியா குடுக்கணும். இதெல்லாம் இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப சப்ணு போயிடும்.
இப்ப… ஏறி ஏறி இறங்கினாத்தான்…. அதுக்குப் பேரே ட்ரெயின், கைகழுவி கைகழுவி சாப்பிட்டு முடிஞ்சவுடன். பந்திக்குப் பந்தி மாத்தி மாத்தி வேற பந்தி போட்டாத்தான் அது கல்யாண வீடே.
அது மாதிரி செத்துச் செத்துப் பிழைச்சாத்தான் உலகமே.
எதையுமே லேட் பண்ணுற தைரியம் வேணும் சார். அதான் சார் தமிழனுடைய குறிக்கோளா இருக்கணும்.
வாழ்க்கை சவுக்கியமா, சங்கீதமா இருக்கணும்னா என்ன பண்ணணும் சார்?
நான் ஒரு கச்சேரிக்குப் போயிருந்தேன் சார். சிமிண்டுத் தரை போட்ட அற்புதமான ஆடிட்டோரியம். ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் மிகச் சிறப்பான வித்துவான். அப்பேர்ப்பட்ட மேதை தோடிராகத்தை வாசிச்சிட்டிருக்கும் போது உச்சக்கட்டத்தைத் தொடப் போறாரு. எல்லோரும் சீட் நுனிக்கு வந்து உட்கார்ந்துக்கிட்டிருக்காங்க. கை தட்டுறதுக்கு இரண்டு கையையும் விரிச்சு வைச்சிட்டிருக்காங்க. அந்த நேரத்தில் பின் வரிசையில் யாரோ ஒருத்தரு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து டங்… என்ற சத்தத்தோட கீழ போட்டாரு. தன்னுடையதில்லைன்னு தெரிஞ்ச முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவன் கூட எல்லோரும் என்ன அது காசு சத்தம்னு பார்க்கிறான். இப்போ எந்த நாதம் பெரிசுங்கிறீங்க? காசுடைய நாதமா? இல்லே சங்கீதத்தினுடைய நாதமா?
We all people…, especially வெளிநாட்டுல இருக்கிறவங்களா நான் பார்த்திருக்கிறேன். They live only on dollars.