புதுடெல்லி: வரலாறு காணாத மாபெரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சுமார் 800 பெண் விவசாயிகள், உச்சநீதிமன்றத்திற்கு ஒரு திறந்த மடலை எழுதியுள்ளனர்.
விவசாயிகள் போராட்டத்தில், தங்களின் பங்கை இருட்டடிப்பு செய்யும் வகையில், உச்சநீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டதை எதிர்த்து இக்கடிதத்தை அவர்கள் எழுதியுள்ளனர்.
மாணவர்களின் உதவியுடன் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்கள்:
* வேளாண்மையில் பெண்கள் மிக முக்கியப் பங்குதாரர்கள்.
* உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்து ஏற்புடையதல்ல.
* வேளாண்மையில் பெண்களின் மிக நீண்ட மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை அந்த கருத்து மறுப்பதோடு மட்டுமின்றி, பெண்களை, விவசாயிகள் என்றே ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்கது.
* தற்போது நடைபெற்றுவரும் மாபெரும் போராட்டத்தில், உரையாற்றுதல், சந்திப்புகளை நிகழ்த்துதல், மருத்துவ உதவி வழங்குதல், சமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பங்களிப்புகளை பெண் விவசாயிகள் செய்து வருகிறார்கள்.
* இப்போராட்டம், வேளாண் எதிர்ப்பு சட்டங்களை நிராகரித்து நடைபெறும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல; ஆண்-பெண் சமத்துவத்தை நடைமுறையில் காட்சிப்படுத்தும் ஒரு இடமுமாகும்.
இவ்வாறு, உச்சநீதிமன்றத்திற்கான அந்த திறந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.