டில்லி
தாம் எப்போதும் விவசாயிகள் பக்கம் நிற்கப்போவதாக அறிவித்து உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து விவசாய தலைவர் பூபேந்தர் சிங் மான் தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு அமல்படுத்திய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தலைநகர் டில்லியில் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதையொட்டி மத்திய அரசு பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் ஒரு முடிவுக்கு வராத நிலை உள்ளது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் இது குறித்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் இந்த வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. அத்துடன் விவசாயிகளுடன் பேசி இது குறித்து சுமுக தீர்வு காண நால்வர் குழு ஒன்றை அமைத்தது. தற்போது அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தேசிய தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பூபேந்தர் சிங் மான் விலகி உள்ளார்.
பூபேந்தர் சிங் மான் தனது விலகல் கடிதத்தில், ”மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண அமைக்கப்பட்ட 4 பேர் குழுவில் என்னை இணைத்தமைக்கு உச்சநீதிமன்றத்துக்கு நன்றி. நான் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே நிலவும் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் நலனுக்காக எந்த பதவியையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளேன். அவ்வகையில் நான் இந்த பதவியில் இருந்து விலகுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.