சிட்னி: பந்தை சேதப்படுத்தியதால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓராண்டு தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இன்னும் திருந்தவில்லை என்பது ஒரு சம்பவத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
ரிஷப் பண்ட் இன்றையப் போட்டியில், மிக அற்புதமாக பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, அவரை அவுட்டாக்க குறுக்கு வழியில் திட்டமிட்டார் ஸ்மித். இதற்காக, பேட்டிங் கிரீஸில், பந்தின் லைனை கணிப்பதற்காக பேட்ஸ்மேன்கள் போட்டு வைக்கும் கணிப்பு கோட்டை அழித்து, அதற்கு மாறாக வேறொரு கோட்டைக் கிழித்து, பன்ட்டை குழப்ப முயன்றார்.
இந்தக் கோடு என்பது, ஒவ்வொரு பேட்ஸ்மேனும், தனது வசதிக்கு ஏற்ப போட்டுக் கொள்வதாகும். எனவே, பன்ட் ஏற்கனவே போட்டிருந்த கோட்டை மாற்றி, புதிய கோடு வரைந்தார் ஸ்மித். இந்தக் கோட்டிற்கு கார்ட்(guard) என்று பெயர்.
ஆனால், பன்ட் இதைக் கண்டுபிடித்துவிட்டார். பிறகு, அதை அழித்துவிட்டு, தனக்கேற்ற புதிய கோட்டை போட்டுக் கொண்டார். ஸ்மித்தின் இந்த சில்லறை செயல், ஸ்டம்ப் கேமராவில் பதிவாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, வெற்றிதான் முக்கியம். அதை எப்படி பெறுகிறோம் என்பதிலெல்லாம் கவலையில்லை. அவர்கள், பல தில்லாலங்கடி வேலைகளை செய்வதற்கு கூச்சப்படமாட்டார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி, இன்று இந்திய பேட்ஸ்மென்கள் மனஉறுதி காட்டி, பல வீரர்களின் காயங்களை மீறி, ஒரு சவாலானப் போட்டியை டிரா செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.