சென்னை: உச்சநீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று, மத்திய அரசு உடனே வேளாண் சட்டங்கள் செய்லபடுத்தப்படுவதை நிறுத்தவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது, வேளாண் பிரச்னைகளுக்கு தீர்வு காண குழு அமைக்க வலியுறுத்திய நீதிபதி, மத்தியஅரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கவில்லையெனில் அதனை உச்சநீதிமன்றம் செய்ய நேரிடும் என்று அட்டார்னி ஜெனரலிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.
அதில், “வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை மறுபரிசீலனை செய்யவேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை மத்திய அரசு கட்டாயம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் இன்றைய இடையீடு, அரசியலமைப்பின் நடைமுறைகளின்படி மத்திய அரசு தனது கடமைகளைச் சரிவர ஆற்றி வரவில்லை என்பதையே காட்டுகிறது.
பல்வேறு தரப்புகளில் இருந்தும் கூறப்பட்டுள்ள அறிவுரைகளைக் கருத்திற்கொண்டும், இலட்சக்கணக்கான விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள், அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்குச் செவிசாய்த்தும், வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்.”
என தெரிவித்துள்ளார்.