கொல்கத்தா: ஐதராபாத்தைச் சேர்ந்த அசாதுதீன் ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு, மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் யாரும்(குறிப்பாக முஸ்லீம்கள்) வாக்களிக்க வேண்டாமென மேற்குவங்க இமாம்கள் கூட்டமைப்புக் கேட்க்கொண்டுள்ளது.
ஓவைஸி கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும், பாஜகவுக்கு விழும் வாக்குகளே என்று அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
பாஜகவை கடுமையாக எதிர்ப்பதாக வெளியில் காட்டிக்கொள்ளும் அசாதுதீன் வைஸி, சமீப காலங்களாக, அக்கட்சியின் தேர்தல் ஏஜெண்டாக மாறிவிட்டார். பாஜகவுக்கு எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் முஸ்லீம் நலன் என்ற பெயரில் தனித்துப் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்து, பாஜக வெற்றிக்கு உதவுவதே அவரின் செயல்பாடாக உள்ளது. பீகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு பெரியளவில் உதவினார் அவர்.
இந்நிலையில், தற்போது வங்காள இமாம் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “பாரதீய ஜனதாவுக்கு எங்கெல்லாம் தேர்தலில் அதிக சவால்கள் உள்ளதோ, அங்கெல்லாம் களத்தில் குதித்து, அவர்களுக்கு உதவுகிறார் இந்த ஐதராபாத் மனிதர்.
மக்கள் யாரை விரும்புகிறார்களோ, அவர்களுக்கு வாக்களிக்கலாம். ஆனால், இந்தமுறை கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது. இந்தத் தேர்தல் என்பது மாநிலத்தின் எதிர்காலத்திற்கு மட்டுமானதல்ல; இங்கு வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் நிர்ணயிக்கக்கூடியதாகும்.
இங்கே, சில சக்திகள் அமைதியைக் குலைத்து, மக்களை பிளவுப்படுத்த முயன்று வருகிறது. அவர்கள் வெறுப்பின் விதைகளை தூவுகிறார்கள். மதரீதியாக மக்கள் குறிவைக்கப்படுகிறார்கள். எனவே, இதுகுறித்த புரிதலுக்கு நாம் வந்து, பொறுப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.