மே. வங்காள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன், ஒவைசி, தனது கட்சியின் பலத்தை மே.வங்க மாநிலத்தில் நிரூபிக்கும் முயற்சியாக கணிசமான வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம்.கட்சியின் மே.வங்க மாநில செயல் தலைவர் ஷேக் அப்துல் கலாம் தலைமையில் அந்த கட்சியினர் நேற்று திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
மாநில அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா முன்னிலையில் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் ஒவைசி கட்சியினர் சேர்ந்தனர்.
அப்போது பேட்டி அளித்த அமைச்சர் சந்திரிமா “நாட்டில் இரண்டு ‘எம்’ கள் உள்ளனர். ஒரு ‘எம்’ விவசாயிகளை பற்றி கவலைப்படாத மோடி. இன்னொரு ‘எம்’, விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட மம்தா” என குறிப்பிட்டார்.
“மே.வங்காளத்தில் ஊர் ஊராக ‘ரோடு ஷோ’ நடத்தும் பா.ஜ.க.வினர், டெல்லியில் போராடும் விவசாயிகளை கண்டு கொள்ளாமல் உள்ளனர்” என அவர் குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நேரத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியினர், மம்தா கட்சியினர் சேர்ந்திருப்பது, ஒவைசிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– பா. பாரதி