சென்னை
தமிழக அரசு திரை அரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதித்ததை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் கோரொனா ஊரடங்கை முன்னிட்டு தொழிலகங்கள், திரை அரங்குகள், அலுவலகங்கள் ஆகியவை மூடப்பட்டன. அதன் பிறகு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டன. திரை அரங்குகள் திறக்கப்பட்டு அதில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆயினும் கொரோனா அச்சுறுத்தலால் பலர் திரை அரங்குகளுக்கு வராததால் பல அரங்குகள் இன்னும் இயங்கவில்லை.
இந்நிலையில் நடிகர் விஜய், சிம்பு ஆகியோரின் திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாவதால் அவர்கள் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். பல மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு 100% அனுமதி அளித்தது. கொரோனா பரவல் குறையாமல் உள்ள நிலையில் இது மேலும் பரவலை அதிகரிக்கும் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாகத் தமிழக அரசு மீது மத்திய அரசு அதிருப்தியில் உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மத்திய உள்துறைச் செயலர் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அவ்வப்போது மத்திய அரசு பல நெறிமுறைகள் அறிவித்து வருகிறது. அவ்வகையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அந்த அறிவிப்பில் கொரோனா கடுமையாகப் பாதிக்கப்படாத இடங்களில் உள்ள திரை அரங்குகளில் 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் கடந்த 4 ஆம் தேதி தமிழக அரசு அனைத்து திரை அரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ் அரங்குகளில் 100% அனுமதிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. இது மத்திய உள்துறை அமைச்சக உத்தரவை மீறுவதாகும்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இந்த உத்தரவை மீறக் கூடாது என்பது சட்டமாகும். அத்துடன் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் மத்திய அரசின் கொரோனா தடுப்பு விதிகளான முகக் கவசம், சமூக இடைவெளி, கூட்டம் கூடுவதற்குத் தடை உள்ளிட்டவற்றை அனைத்து அரசுகளும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இந்த நெறிமுறைகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.