ஊரடங்கு காரணமாக கேரள மாநிலத்தில் கடந்த 10 மாதங்களாக தியேட்டர்கள், மூடப்பட்டுள்ளன.
“50 சதவீத இருக்கைகளுடன் 5 ஆம் தேதி (நேற்று முதல்) தியேட்டர்களை திறக்க கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அனுமதி வழங்கினார்.
ஆனால் கேரளா முழுவதும் நேற்று தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.
“கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த காலத்தில், அதற்கு கணக்கிடப்பட்ட மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்” என கேரள சினிமா வர்த்தக சபை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதில் எந்த கோரிக்கையும் ஏற்கப்படாத நிலையில், தியேட்டர்களை திறக்க அதன் உரிமையாளர்கள் முன்வரவில்லை.
“உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் சினிமா பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் எந்த தீர்வும் காணப்படவில்லை” என சினிமா வர்த்தக சபை நிர்வாகி குறிப்பிட்டார்.
“புதன்கிழமை (இன்று) கொச்சியில் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் ஆகிய மூன்று அமைப்பினரும் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் தியேட்டர்களை திறப்பது குறித்து முடிவு எட்டப்படும்” என வர்த்தக சபை நிர்வாகி மேலும் தெரிவித்தார்.
– பா. பாரதி