இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீபத்தில் இடித்து நாசமாக்கப்பட்ட 100 ஆண்டு பழைமை வாய்ந்த இந்து கோயிலை, மீண்டும் கட்டித்தர வேண்டுமென இபிடிபி எனப்படும் வெளியேற்றப்பட்டவர் சொத்து அறக்கட்டளை வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு உச்சநீதிமன்றம்.
அந்தக் கோயிலானது, பாகிஸ்தானின் கராக் மாவட்டத்தில், கைபர் பக்டுன்குவா என்ற இடத்தின் டெர்ரி கிராமத்தில் அமைந்துள்ளது. அந்தக் கோயிலை, தீவிரவாத தன்மை கொண்ட இஸ்லாமிய அமைப்பான ஜமியாத் உலமா-இ-இஸ்லாம் கட்சி என்ற அமைப்பு இடித்து அழித்தது.
இந்த செயல், உலகெங்கிலுமிருந்தும் பலத்த கண்டனங்களை பாகிஸ்தானின் மீது எழுப்பியுள்ளது. சிறுபான்மை இனத் தலைவர்களும், மனித உரிமை அமைப்புகளும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் நாட்டு உச்சநீதிமன்றம், இடிக்கப்பட்ட கோயிலை மறுகட்டுமானம் செய்து தர வேண்டுமென இபிடிபி அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், நாடெங்கிலுமுள்ள கோயில்களில் நிகழ்த்தப்பட்டுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி, அந்த செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மோசமான செயலால், உலகளவில் பாகிஸ்தானுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளது.