சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் மழை கொட்டி வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
சென்னையில் திடீரென கொட்டி வரும் மழை காரணமாக சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். பல பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கியுள்ளதால் சைதாப்பேட்டை பஜார் சாலையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் அடுத்த 3 மணி நேரம் முதல் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்ற தெரிவித்து உள்ளது.
இந்த மழையானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கிழக்கு திசை காற்று காரணமாக பெய்து வருவதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்து.