மாஸ்கோ
மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய அதிபர் புதின் விருது அளித்துள்ளார்.
பல விருதுகளைப் பெற்றுள்ள தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் கடந்த 1934 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 24 அன்று கடலூரில் பிறந்தவர் ஆவார். இவருடைய புரட்சிகரமான கதைகள் அக்காலத்திலேயே பரவலாக பேசப்பட்டது. இவர் இந்திய அரசின் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாம் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவருடைய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் புகழ் பெற்றவை ஆகும்.
இவர் ஞானபீட விருது மட்டுமின்றி சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்தார். அதன் பிறகு அங்கிருந்து விலகி காமராஜரின் தொண்டனாகி தமிழக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடந்த 1953 முதல் தமிழக எழுத்தாளராக உள்ள இவர் கடந்த 2015 ஆம் வருடம் ஏப்ரல் 8 ஆம் தேதி மரணம் அடைந்தார்.
ரஷ்ய எழுத்தாளர் புஷ்கினின் எழுத்தைத் தமிழில் மொழி பெயர்த்துள்ள ஜெயகாந்தனின் படைப்புக்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்தோ ரஷ்ய கலாச்சார மற்றும் நட்புறவு மையத்தின் தலைவராக ஜெயகாந்தன் பணியாற்றி உள்ளார். அவரது சீரிய பணியைப் பாராட்டி அவருக்கு ரஷ்யாவின் உயரிய விருதான நட்புறவு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை ரஷ்ய அதிபர் புதின் வழங்கி உள்ளார்.