மும்பை: அஜின்கியா ரஹானேவை இப்போது புகழ்ந்துரைத்தால், அது மும்பைக்காரருக்கு திட்டமிட்டு ஆதரவளிக்கிறேன் என்ற குற்றச்சாட்டில் போய் முடியும் என்று பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
விராத் கோலி இல்லாத நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், எஞ்சிய மூன்று போட்டிகளுக்கு தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றார் அஜின்கியா ரஹானே.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி துவங்கிய நிலையில், முதல் நாளான இன்று, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், மொத்தம் 195 ரன்களுக்கே முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.
இந்தியப் பந்துவீச்சாளர்களை மிக சரியான முறையில் பயன்படுத்தியதாலும், ஃபீல்டிங் அமைப்பு தேவையானபோது பொருத்தமான முறையில் மாற்றியமைத்ததுமே இதற்கு காரணம் என்று முன்னாள் வீரர்கள் பலராலும் பாராட்டப்படுகிறார் அஜின்கியா ரஹானே.
ரஹனே மும்பையைச் சேர்ந்தவர். இந்நிலையில், அதே மும்பையைச் சேர்ந்த கவாஸ்கர் கூறியுள்ளதாவது, “தற்போதைய நிலையில் அஜின்கியா ரஹானேவை நான் புகழ்ந்தால் அது மிகவும் அவசரப்பட்ட ஒன்றாக இருக்கும். இன்னும் சற்று பொறுத்திருப்போம்.
அவரின் சிறந்த கேப்டன்சியை இப்போது நான் பாராட்டினால், அது ஒரு மும்பைக்காரன் என்ற முறையில், இன்னொரு மும்பைக்காரரை உள்நோக்கத்தோடு புகழ்கிறேன் என்ற குற்றச்சாட்டு என்மீது எழும். எனவே, காலம் கனியட்டும்” என்றுள்ளார் கவாஸ்கர்.