சென்னை
சென்னை – மைசூரு இடையில் புல்லட் ரயில் அமைக்கும் திட்டத்துக்கு நில அளவைக்கு இந்திய ரயில்வே ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.
இந்திய அரசு புல்லட் ரயில் வகையில் ஆறு தடங்களில் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2024 தொடக்கத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் சராசரியாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்ல உள்ளது. இந்த புல்லட் ரயில் திட்டங்களில் சென்னை – மைசூரு திட்டமும் ஒன்றாகும்.
இந்த ரயில் திட்டம் தொடங்க முதல் கட்டமாக நேற்று நில அளவை பணிகளுக்கு இந்திய ரயில்வே ஒப்பந்தப்புள்ளிகள் கோரி உள்ளன.. தற்போது 450 கிமீ தூரமுள்ள இந்த தடத்தில் அதிவேக ரயிலான ஷதாப்தி எக்ஸ்பிரஸ் செல்கிறது. இது 7 மணி நேரம் பயணம் செய்கிறது. இந்த புல்லட் ரயில் இயங்க தொடங்கிய பிறகு பயண நேரம் இரண்டரை மணி நேரமாகக் குறையும்.
இந்த ரயில் பெங்களூர், மாண்டியா, சென்னபட்னா, பங்காருப்பேட்டை, சித்தூர், அரக்கோணம், பூந்தமல்லி ஆகிய 7 இடங்களில் நிற்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. அதே வேளையில் இது இன்னும் உறுதி படுத்தப்படவில்லை என அறிவிக்கபட்டுள்ளது.
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த திட்டத்துக்கான கட்டுமானப்பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் 750 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியது எனவும் இதன் கட்டணம் தற்போதுள்ள முதல் வகுப்பு ஏசி பெட்டி கட்டணத்தைப் போல் ஒன்றரை மடங்கு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது மும்பை – அகமதாபாத் புல்லட் ரயிலில் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலைப் போல் இதிலும் ஏற்படலாம் எதிர்பார்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.,