சென்னை: ஒருபக்கம் விவசாயிகளை இழிவுபடுத்திவிட்டு, மறுபக்கம் பேச்சுவார்த்தை என்கிற நாடகத்தை பாஜக அரசு அரங்கேற்றி வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: இந்திய விடுதலைப் போராட்டத்தை மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சை வழியில் நடத்தி, பிரதமர் நேரு தலைமையில் நவ இந்தியாவைப் படைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட 136ம் ஆண்டு தொடக்க விழா வருகிற டிசம்பர் 28 அன்று வேலூரில் நடைபெற உள்ளது.

இவ்விழாவோடு விவசாயிகளின் ஏர்கலப்பை சங்கமமும் எனது தலைமையில் அன்று மதியம் 2 மணி முதல் நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மிகச் சிறப்பாக செய்து வருகின்றன.

தலைநகர் டெல்லியில் 3.5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்ப நிலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெஞ்சுரத்துடன் போராடி வருகிறார்கள். நெடுஞ்சாலைகளில் அமர்ந்து, உணவு உண்டு, படுத்து அத்தகைய வீரம் செறிந்த போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள்.

அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த மோடி அரசு தயாராக இல்லாத நிலையில் உச்ச நீதிமன்றமே ஒரு குழுவை அமைத்து பேச்சு வார்த்தை நடத்த ஆணையிட்டது. பிரதமர் மோடி செய்யத் தவறியதை உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் இந்நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிற விவசாயிகளின் கோரிக்கையை செவிமடுத்துக் கேட்கத் தயாராக இல்லை.

இப்போராட்டத்தில் இதுவரை 31 விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். அனைத்து நிலைகளிலும் தன்னிச்சையாக, ஏதேச்சதிகாரமாக, ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுகிற பிரதமர் மோடி, விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முயல்வது மிகுந்த கண்டனத்திற்குரியது.

விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறபோது, அவர்களை தேசத் துரோகிகள், காலிஸ்தான் தீவிரவாதிகள், பாகிஸ்தான் கைக்கூலிகள், மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்று பாஜக அமைச்சர்களே இழிவுபடுத்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். ஒருபக்கம் விவசாயிகளை இழிவுபடுத்திவிட்டு, மறுபக்கம் பேச்சுவார்த்தை என்கிற நாடகத்தை பாஜக அரசு அரங்கேற்றி வருகிறது.

தலைநகரில் டெல்லி சலோ என்ற முழக்கத்துடன் விவசாயிகள் நடத்தும் போராட்டம் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுகிற வரை ஓயப் போவதில்லை. புதிய வேளாண் சட்டத்தால் பறிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்கிற வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். ஒப்பந்தச் சாகுபடி முறை ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகிறார்கள். இது விவசாயிகளின் வாழ்வா, சாவா போராட்டமாகும்.

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தஞ்சையில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியிருக்கிறார். மோடி ஆட்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை நிறைவேற்றப்படுவதாக பேசியிருக்கிறார். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் போராடுவதே குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்காகத்தான்.

புதிய வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை என்பதை மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் விளக்கம் கூறுவாரா? விவசாயிகள் மீது ஒப்பந்த விவசாயம் ஏன் திணிக்கப்படுகிறது? விவசாயச் சந்தைகள் கார்ப்ரேட்டுகளுக்கு ஏன் திறந்துவிடப்படுகிறது?

இதற்கெல்லாம் பாஜகவினர் பதில் கூறாமல் விவசாயிகளின் நண்பன் மோடி என்று கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? எனவே பாஜகவினரின் விவசாய விரோத வேளாண் சட்டங்களினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து தீவிரமான பிரச்சாரத்தைக் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ள வேண்டும்.

வேலூரில் டிசம்பர் 28 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் 136ஆம் ஆண்டு தொடக்க விழாவும், விவசாயிகளின் ஏர்கலப்பை சங்கமும் இணைந்து நடத்தப்பட உள்ளது. விவசாயிகளின் எழுச்சிமிக்க சங்கமத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

எனவே, டிசம்பர் 28 அன்று வேலூரில் நடைபெற உள்ள எழுச்சிமிக்க காங்கிரஸ் தொடக்க நாள் விழாவிலும், விவசாயிகள் ஏர்கலப்பை சங்கமத்திலும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் அணி திரண்டு பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.