சென்னை: தனியார் நிறுவனங்கள் மூலமாக மின்வாரியத்திற்கு 30ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற மின்வாரியத்தின் ஆணை ரத்து செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்களின் போராட்ட அறிவிப்பு காரணமாக, அதிமுக அரசு இந்த உத்தரவை ரத்து செய்துள்ளது.
தமிழக மின்வாரியத்திற்கு தனியார் மூலம் 30 ஆயிரம் ஆட்கள் தேர்வு செய்யப்பட போவதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்து விட்டதாகவும் மின்வாரியம் அறிக்கை வெளியிட்டது. இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மின்வாரிய தொழிலாளர்கள், அரசின் உத்தரவுக்கு எதிராக கொதித்தெழுந்தனர். தொடர்ந்து, அமமுக, திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டன.
தனியார் வசம் சென்றால், தமிழர்களுக்கு வேலை கிடைக்காத சூழல் ஏற்படும் என்பதால் இந்த அறிவிப்புக்கு அனைத்து மட்டத்திலும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால், மின்வாரியமோ, இது தற்காலிகமான அறிவிப்பு தான் என்றும் 3 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம் போல அரசே ஆட்களை தேர்வு செய்யும் என கூறியது.தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத மின்வாரிய ஊழியர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில், தனியார் மூலம் மின்வாரிய ஊழியர்களை தேர்வு செய்யும் உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்து உள்ளார்.