டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கி இருக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நவம்பர் 26ம் தேதி முதல், டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
விவசாயிகளின் இந்த போராட்டம் 4வது வாரத்தை எட்டி இருக்கிறது. மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்பட வில்லை. மாறாக, மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை ஏற்க மறுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பெயரிலான பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கி இருக்கிறது. இந்த பக்கத்தின் வழியாக போராட்டக்களத்தில் நடக்கும் தகவல்களை அனைத்து தரப்பினரும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் இப்போது இந்த பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கி உள்ளது. இந்த பக்கத்தை சுமார் 7 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதே போன்று இன்ஸ்டாகிராம் பக்கமும் நீக்கப்பட்டு உள்ளது.
போராட்டக் குழுவின் தலைவர்களில் ஒருவரான, யோகேந்திர யாதவ், போராட்ட நிகழ்வுகளை தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பி வந்தார்.
வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் விவசாயிகள் ஈடுபடுவர் என்றும், அதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பர் என்றும் கூறி இருந்தார். அதன் பிறகே இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.