கோலார்: கர்நாடகத்தின் நர்சபுரா என்ற இடத்திலுள்ள விஸ்ட்ரான் ஐஃபோன் உற்பத்தி நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, எஸ்எஃப்ஐ அமைப்பின் தாலுகா தலைவர் ஸ்ரீகாந்த், காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
அவர், கோலார் காவல்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கோலார் மக்களவைத் தொகுதியில் பாரதீய ஜனதா உறுப்பினர் எஸ்.முனிஸ்வாமி அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் தடுத்து வைக்கப்பட்டார். சம்பவம் நடைபெற்ற இடம், தலைநகரம் பெங்களூருவிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.
எஸ்எஃப்ஐ என்ற மாணவர் அமைப்பின் தாலுகா தலைவராக இருப்பவர்தான் இந்த ஸ்ரீகாந்த். குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறையில், இந்த இயக்கத்தின் உறுப்பினர்களுக்கும் தொடர்புண்டு என்று காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது மற்றும் அதுதொடர்பான தகவல் வாட்ஸ்ஆப்பிலும் பரவியது.
ஸ்ரீகாந்த் மீது எந்தவித குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாத காவல்துறை, அவரை, விசாரணைக்குப் பிறகு விடுவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார் எஸ்எஃப்ஐ அமைப்பின் மாநில செயலாளர் வாசுதேவ ரெட்டி.