புதுடெல்லி:
கட்சி விரும்பினால் தலைவர் பதவியை ஏற்று கொள்ளத்தயார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என அதிருப்தி தலைவர்கள் சிலர் வலியறுத்தி வரும் நிலையில் அவர்களுடன் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ராகுல் மற்றும் பிரியங்காவும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் அதிருப்தி தலைவர்களான மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிகிறது.
கூட்டத்தில் முக்கியமாக கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ராகுல் காந்தியை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என சிலர் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து விரிவான விவாதம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நிர்வாகிகள் மத்தியில் பேசிய சோனியா காந்தி, நாம் அனைவரும் ஒரே குடும்பம், கட்சியை வலுப்படுத்த அனைவரும் உழைக்க வேண்டும் எனக் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளும் ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், கட்சி விரும்பினால் தலைவர் பதவியை ஏற்று கொள்ளத்தயார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.