டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஓராண்டுக்கு மேல் தலைவர் நியமிக்கப்படாத நிலையில், புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, இன்று மூத்த தலைவர்கள் மற்றும் அதிருப்தியாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த 2019ம்ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராகுல்காந்தி, ப.சிதம்பரம் உள்பட மூத்த தலைவர்களை கடுமையாக சாடினார். இதனால், கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, கட்சியின் தலைமை ஏற்க யாரும் முன்வராததால், சோனியா காந்தியே இடைக்காலத்தலைவராக நீடித்து வருகிறார். புதிய தலைவரை தேர்தல் நடத்தி, தேர்ந்தெடுக்கும்படி சிலரும், இந்திரா காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவரே  தலைவராக வர வேண்டும் ஒன்று ஒரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சந்தித்து வரும் தொடர் தோல்விகளால் அதிருப்தியடைந்த மூத்த தலைவர்கள் , கட்சி  தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர். கபில்சிபல் உள்பட 5 மாநில முன்­னாள் முதல்­வர்­கள், முன்­னாள் மத்­திய அமைச்­சர்­கள்,  எம்­பிக்­கள் உள்பட 23 பேர்  இணைந்து, காங்கிரஸ் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர். அதில்,  கட்சி­யைப் பலப்­ப­டுத்த அனைத்து அமைப்­பு­க­ளுக்­கும் தேர்­தல் நடத்­த­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தினர்.
இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இடைக்காலத்தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக சோனியா காந்தி காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவித்தார். இந்த விவகாரம் குறித்து ராகுல்காந்தி பேசிய கருத்து, மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பின்னர், கட்சித்தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று சோனியாவே மீண்டும் இடைக்காலத் தலைவராக நீடித்து வருகிறார். இருந்தாலும்,  தலைமைக்கு எதிரான  அதிருப்தி குரல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு  புதிய தலைவரை தேர்ந்தெடுக்க சோனியா திட்டமிட்டு உள்ளார்.   இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்களுடனும், அதிருப்தி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த, அவர் திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக, டில்லியில், கட்சியின் தலைமை அலுலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இதில், மூத்த தலைவர்கள், மன்மோகன் சிங், அந்தோணி, சிதம்பரம் மற்றும் அதிருப்தி தலைவர்கள் குலாம் நபி ஆசாத், சசி தரூர், ஆனந்த் சர்மா ஆகியோருடன்  சோனியா ஆலோசனை நடத்த உள்ளார்.  இதற்கான ஏற்பாட்டை மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான கமல்நாத் ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்த கூட்டத்தில், ராகுலும், கட்சியின் பொதுச்செயலாளர்  பிரியங்காவும், தனது தாயுடன் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.  தொடர்ந்து, அடுத்து வரும் நாட்களில், மற்ற அதிருப்தி தலைவர்கள் உட்பட, மூத்த தலைவர்கள் அனைவரையும் சந்தித்தது ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டங்களில், ராகுலை தலைவராக நியமிக்க மூத்த நிர்வாகிகளுடன் சோனியா ஆதரவு கோருவார் என எதிர்பவார்க்கப்படுகிறது.
சமீபத்தில், கட்சி மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா  ராகுல் மீண்டும் தலைவராக அறிவிக்க 99.9 சதவீத வாய்ப்புள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
https://www.patrikai.com/why-write-the-letter-to-sonia-kapil-sibal-explanation-new-tweet/