மதுரை: மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லையா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், மேற்கொண்டு பணிகள் நடைபெறாத நிலையில், நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்றபர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக  பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில்,  மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகளும் நடைபெறவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழகம் மற்றும் கேரளா மாநில மக்கள் பெரும் பயன் அடைவார்கள். மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவது தொடர்பாக எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. ஆகவே, மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து,  மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லையா?  என்று கேள்வி எழுப்பியதுடன், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை  தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என தகவல்கள் வருகின்றன. 2 ஆண்டுகள் ஆகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? வழக்கில் இரண்டு மாதங்களாகியும் முறையாக பதில் தராதது வருத்தம் அளிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், சுகாதார செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல்  வழக்கறிஞர் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகபடுத்துவதில் சில பிரச்னைகள் உள்ளதால், காலதாமதம் ஏற்படுகிறது என தெரிவித்தார். விரிவான பதில் அளிக்க மேலும்,  அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.