திருவனந்தபுரம்: கேரளாவில் வருகிற 1-ந் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும், காலை, மாலை என இரு ஷிப்டு முறையில் மாணவர்கள் வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ள கல்வி நிலையங்களை திறப்பது மற்றும் இறுதித்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, முதல்வர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அவர் கூறியதாவது,
கல்லூரிகள் வருகிற 1-ந் தேதி முதல் திறக்கப்படும். காலை மற்றும் மாலை என ஷிப்ட் அடிப்படையில் 50 சதவீத மாணவர்கள் வீதம் வகுப்புகளில் பங்கேற்கலாம்.
மருத்துவ கல்லூரிகளில் 2-ம் ஆண்டு முதல் தொடங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகளை மார்ச் 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக மாணவர்கள் செய்முறை பயிற்சி தேர்வுகளை அடுத்த மாதத்தில் நடத்தி முடிக்க வசதியாக அவர்களுக்கு வகுப்புகள் ஜனவரி 1-ந் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பமாகும்.
ஏற்கனவே கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் தொடங்கிய ஆன்லைன் வகுப்புகளுக்கான ரிவிஷன் மற்றும் தொடர் பயிற்சி வகுப்புகளும், வருகிற 1 முதல் நடத்தப்படும்.
இதன் தொடர்ச்சியாக மாடல் தேர்வுகள், மற்றும் மாணவ, மாணவிகளுக்கான கவுன்சிலிங் பள்ளிகளில் நடத்தப்படும்.
கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொது தேர்வுகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.