டெல்லி: இந்திய ராணுவத்தின் கரங்களை மேலும், வலுப்படுத்தும் வகையிலும், தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்கும் வகையிலும் 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய சீன எல்லையில் மற்றும் காஷ்மீர் பகுதியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்தியா ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.28ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
அண்டை நாட்டு ராணுவத்தின் அத்துமீறல் தொடர்ந்து வருகிறது. சீனா ஒரு புறத்திலும் பாகிஸ்தான் மற்றொரு புறத்தில் எல்லை பகுதியில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதை இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக தகர்ந்தெறிந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய இராணுவத்தின் மூன்று பிரிவுகளுக்கும் 28,000 கோடி ரூபாய் செலவில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath singh) தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) உள்நாட்டு தொழில்துறையிலிருந்து ரூ .27,000 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கடற்படைக்கான அடுத்த தலைமுறை ரோந்து கப்பல்கள் மற்றும் இராணுவத்திற்கான கண்காணிப்பு உபகரணங்கள், டிஆர்டிஓ தயாரித்த விமானங்களை கண்டறிந்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
இது குறித்து கூறிய ராணுவ அதிகாரிகள் , ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆயுதங்களும் இராணுவ உபகரணங்களும் உள்நாட்டு நிறுவனங்களின் தயாரிப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ .28,000 கோடி மதிப்புள்ள ஏழு திட்டங்களின் கீழ், ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘தற்சார்பு இந்தியா’ (Aathmanirbhat Bharat) பிரச்சாரத்தை ஊக்குவிக்க இந்திய தொழில்துறையினரிடம் இருந்து வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.