ஐதராபாத் :

ருங்கிணைந்த ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத், இப்போது தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராகி விட்டது.

எனவே, அமராவதி நகரை ஆந்திர மாநில தலைநகராக அமைக்க முன்னாள் முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டிருந்தார். ஆனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின், முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவுக்கு அமராவதி, கர்னூல், விசாகப்பட்டினம் ஆகிய மூன்று தலைநகர்களை அமைக்கப்போவதாக அறிவித்தார்.

இதற்கு அமராவதி பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த பகுதி விவசாயிகள் தங்களின் 32 ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலத்தை, அமராவதி தலைநகரம் ஆவதற்கு அளித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் தொடங்கி நேற்றுடன் ஓராண்டாகிறது. இதையொட்டி அமராவதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் “அமராவதிக்கு பதிலாக மூன்று தலைநகரங்களை அமைக்க ஜெகன் மோகன் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக ஆந்திர மாநிலத்தில் உள்ள 6 கோடி பேரிடம் வாக்கெடுப்பு நடத்த ஜெகன் தயாரா ? இந்த வாக்கெடுப்பில் ஜெகன் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டு விலகத்தயாராக இருக்கிறேன்” என சவால் விடுத்தார்.

– பா. பாரதி