மும்பை: மூத்த குடிமக்களின் உள்நாட்டு விமான பயணத்தில், 50 சதவிகித கட்டணச்சலுகை வழங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏழுமாதங்களுக்கு மேல் விமான சேவைகள் முடங்கியுள்ளன. தற்போது, இந்தியா உள்பல பல நாடுகளில் கட்டுக்குள் இருப்பதால், சில நாடுகள் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.
அதன்படி, ஒரு விமானத்தில் 80 விழுக்காடு பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது படிபடிப்படியாக விமான போக்குவரத்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, மீண்டும் மக்களிடையே விமான பயணத்தை ஊக்குவிக்கும் நோக்கில், விமான நிறுவனங்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணத்தில் 50% வரை கட்டணச் சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே இந்த கட்டணச் சலுகை பொருந்தும் என்றும், பயணம் மேற்கொள்ளும் நபர், 60 வயது நிறைவடைந்தவராக இருத்தல் வேண்டும் என்றும், சலுகை பெறும் மூத்த குடிமக்கள் எக்னாமிக் வகுப்பில் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் கண்டிஷசன் போட்டுள்ளது.
மேலும்,, பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள், 3 நாட்களுக்கு முன்னதாகவே அட்வான்சாக டிக்கெட் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது ஏர் இந்தியா வழங்கியுள்ள மூத்த குடிமக்களுக்கான அட்டை போன்ற ஏதாவது ஒரு ஆதாரங்கள் கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
50 விழுக்காடு டிக்கெட் குறைப்பு என்பது விமானக் கட்டணத்தின் அடிப்படை கட்டணத்தில் இருந்து மட்டுமே சலுகை வழங்கப்படும். வரி உள்ளிட்ட இதர கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படும்.
ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.