டில்லி
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குத் தபால் ஓட்டு அளிக்க உள்ள தேர்தல் ஆணையம் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளது குறித்து ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
வெளிநாடுகளில் சுமார் 1 கோடி இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் 60 லட்சம் பேருக்கு வாக்குரிமை உள்ளது. இவர்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் தங்கள் வாக்குகளைச் செலுத்த முடியாத நிலை உள்ளது. இவர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் மின்னணு தபால் வாக்கு திட்டம் என ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது தற்போது சோதனை முறையில் 8 நாடுகளில் உள்ளோருக்கு அமல்படுத்தப்பட உள்ளது.
அவை அமெரிக்கா, கனடா, நியுஜிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். இதில் வளைகுடா நாடுகள் சேர்க்கப்படவில்லை. அவை குடியரசு அல்லாத நாடுகள் என்பதால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வரும் 2021 ஆம் வருடம் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கம், அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுவை ஆகியவற்றில் சோதனை முறையில் அமலாகிறது.
இது குறித்து குடியரசு சீர்திருத்த சங்க நிறுவனர் ஜக்தீப் சோக்கர், “வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை மட்டும் இதில் சேர்க்காதது ஏன்? இந்த நாடுகள் குடியரசு நாடுகள் இல்லை எனினும் வாக்களிப்பை எதிர்க்காத நாடுகள் ஆகும். எனவே மிகவும் தூரத்தில் உள்ள ஓரிரு நாடுகளில் மட்டுமாவது இந்த சோதனை முறையை அனுமதிப்பது குறித்து யோசிக்க வேண்டும்.
குறிப்பாக வளைகுடா நாடுகளிலும் ஒரு சில செல்வந்தர்களான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். செல்வந்தர்களாக இருக்க மற்ற நாட்டினரை அனுமதிக்கும் அரசுகள் அவர்கள் தங்கள் நாட்டு வாக்கெடுப்பில் கலந்துக் கொள்வதை அனுமதிக்காதா? இதனால் செல்வந்தர்கள் மட்டுமின்றி அங்குப் பணி புரியும் ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள், தொழிலாளர்கள் போன்றோரும் வாக்களிக்க ஏதுவாகும்.
அதே வேளையில் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 45.4 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 28.5 கோடி பேருக்கு வாக்குரிமை உள்ளது. எனவே 38% இந்திய மக்களால் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. இவர்களுக்கு வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் என்ன ஏற்பாடுகளைச் செய்துள்ளது. எனவே 60 லட்சம் இந்தியர்களுக்கு அளிக்கும் உரிமையைக் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.